காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

காலி குடங்களுடன் மறியல்

நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தரபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லகிந்தனபள்ளியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்காக 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் மூன்று மாதமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணனிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் பச்சூர்-குப்பம் சாலையில் நேற்று காலை காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அந்தவழியாக வந்த பள்ளி வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களை சிறை பிடித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் சாலை மறியல் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதானந்தம், அப்துல் கலீல் ஆகியோர் சென்று பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story