குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 July 2023 6:45 PM GMT (Updated: 26 July 2023 6:46 PM GMT)

கொள்ளிடம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி கடலோர பழையாறு கிராமத்தில் சுனாமி நகர் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில். 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த சுனாமி நகருக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி அங்குள்ள மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேறு குடிநீர் ஆதாரம் ஏதும் இல்லை. இதனால் சில தனியார் டேங்கர் லாரிகள் மூலம் அங்கு விற்பனை செய்யப்பட்டு வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5 கொடுத்தும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

இந்த நிலையில் பழையாறு சுனாமி நகருக்கு கடந்த ஒரு வார காலமாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கும் குடிநீர் வரவில்லை.இதனால் அங்குள்ளவர்கள் குடிநீரின்றி மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றும் பழையாறு சுனாமி நகருக்கு குடிநீர் வழங்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தி பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதுப்பட்டினம் வழியே சீர்காழி நோக்கிச் செல்லும் சாலையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜெயபிரபா தலைமையில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் தடையின்றி குடிநீர் வழங்க உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதுகுறித்து பழையாறு சுனாமி நகரை சேர்ந்த பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வசித்து வரும் 2500-க்கும் மேற்பட்டவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வந்து சேரும் தண்ணீர் மட்டுமே இருந்து வருகிறது. இங்கு வேறு குடிநீர் கிடைப்பதற்கு வழி இல்லை. இதனால் இனி எந்த தடையும் இன்றி தொடர்ந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் தண்ணீரை தடையின்றி வழங்க வேண்டும் என்றனர்.


Next Story