கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய பெண்கள்


கழிவுநீர் கால்வாயை தூர்வாரிய பெண்கள்
x

குடியாத்தம் அருகே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பெண்களே கழிவுநீர் கால்வாயை தூர்வாரினர்.

வேலூர்

நடவடிக்கை இல்லை

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், செருவங்கி ஊராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகர் 1-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் மழையின்போது, மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து தெருவில் தேங்கியது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் செருவங்கி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

பெண்களே தூர்வாரினர்

மழைநீருடன், கழிவுநீரும் கலந்து தெருவில் தேங்குவதால் நடந்து செல்ல முடிவதில்லை. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும், சில சமயங்களில் விஷ பூச்சிகள் வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் அந்த தெருவில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்று சேர்ந்து கழிவுநீர் கால்வாயை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஏராளமான பெண்கள் கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

மேலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள கால்வாய்களை சிரமைத்து, மீண்டும் கழிவுநீர் தேங்காத வண்ணமும், மழை நீர் தெருவில் தேங்கி நிற்காதவாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story