ரேஷன் கார்டுகளுடன் பெண்கள் தர்ணா


ரேஷன் கார்டுகளுடன் பெண்கள் தர்ணா
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:47 PM GMT)

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளுடன் பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 75-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து கையில் ரேஷன் கார்டுகளை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாகவும் கூறி கோஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் வந்து அவர்களிடம் பேச்வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் திருவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட கே.என்.பேட்டை பகுதியை சேர்ந்த நாங்கள், கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.

கலெக்டரிடம் மனு

நாங்கள் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு அளித்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.இதனால் எங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போகிறோம் என்று கூறினர். இதை கேட்ட போலீசார், பொதுமக்களுக்கு இடையூறாக இப்படி போராட்டம் செய்யக்கூடாது. உங்களின் நியாயமான கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரியுங்கள் என்றனர். இதை கேட்டதும் முக்கிய நபர்கள் மட்டும் சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் அருண்தம்புராஜ், இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதை கேட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.


Next Story