காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்
தென்காசியில் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திரண்டனர்.
தென்காசி மாவட்டம் ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து கட்டளையூர் கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை திரண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் ஊரில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கட்டளையூர் மற்றும் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கான நீர்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் தற்போது இந்த ஒரு ஆழ்குழாய் நீரையே நம்பி இருக்க வேண்டிய நிலையில் பக்கத்து ஊரில் நீர் தேவைகளுக்காக 3 ஆழ்துளை கிணறு போடப்பட்டு 3 சின்டெக்ஸ் தொட்டி நீர் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இருக்கும் நீர் எங்களுக்கு போதுமானதாக இல்லாத நிலையில் எங்கள் ஊரில் இருந்து குழாய் பதித்து பக்கத்து ஊருக்கு எடுத்துச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.