மகளிர் உரிமைத்தொகை கோரி குவிந்த பெண்கள்


மகளிர் உரிமைத்தொகை கோரி குவிந்த பெண்கள்
x

புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஏராளமான பெண்கள் குவிந்தனர். மனுக்களை பதிவு செய்ய தனி வசதியை கலெக்டர் மெர்சி ரம்யா ஏற்படுத்தி கொடுத்தார்.

புதுக்கோட்டை

மகளிர் உரிமைத்தொகை

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று வருகை தந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 பெற விண்ணப்பித்தும், தங்களுக்கு பணம் வரவில்லை என ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். இதில் மணமேல்குடி அருகே இடையாத்தூர் கூம்பள்ளம், பிராமணவயல் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி மொத்தமாக திரண்டு வந்திருந்தனர்.

மனுக்கள் பதிய தனி இடம்

இதற்கிடையில் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கவும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்ததால் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் கூட்டம் அலைமோதியது. இது குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் மெர்சி ரம்யா உடனடியாக கூட்டரங்கில் இருந்து மனுக்கள் பதிவு செய்யும் இடத்திற்கு வந்தார்.

மகளிர் உரிமைத்தொகை தொடர்பான மனுக்களை பதிவு செய்ய தனி வசதி ஏற்படுத்தி கொடுத்தார். அதே வளாகத்தில் மற்றொரு இடத்தில் பெண்கள் அமர வசதியாக இருக்கைகள் போடப்பட்டன. மேலும் மனுக்கள் பதிவு செய்வதற்கு தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் மனு அளித்தவர்களின் பெயர் விவரம், செல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்டவை சேகரித்து பதிவு செய்யப்பட்டன.

மாணவர் சாவில் நடவடிக்கை கோரி...

புதுக்கோட்டை முன்மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த விஜயபுரத்தை சேர்ந்த மாணவர் மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதில், அந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுக்கு மாற்றக்கோரியும், மாணவர் சாவுக்கு நிவாரணம் கோரியும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவரின் சகோதரி மகரஜோதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.

ஆவுடையார்கோவில் அருகே குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் கடந்த ஆண்டில் கன மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதில் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க கோரி தெரிவித்திருந்தனர்.

மகளிர் குழு நடத்தி மோசடி

விராலிமலை தாலுகா பாரப்பட்டி, கல்குடி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் சிலர், தங்களிடம் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி கடன் பெற்று தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகவும், தங்க நகைகளை வாங்கிக்கொண்டு அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தலைமறைவானதாகவும் தெரிவித்திருந்தனர்.

பெருங்குடி அருகே நீதிநாதபுரம் வடக்குப்பட்டியில் அரசு தரப்பில் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் வசித்து வரும் பொதுமக்களை வெளியேற தனி நபர்கள் மிரட்டுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் தரப்பில் மனு அளித்தனர்.

இதேபோல மின் கட்டணம் உயர்வை குறைக்க கோரி சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

651 மனுக்கள்

கூட்டத்தில் மொத்தம் 651 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் செய்யது முகம்மது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story