பொன்பாடி ஊராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகை


பொன்பாடி ஊராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 July 2023 9:59 AM GMT (Updated: 13 July 2023 11:11 AM GMT)

திருத்தணி தாலுகா பொன்பாடி ஊராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கடையின் முன்பு முற்றுகை போராட்டம் செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி,

திருத்தணி தாலுகா பொன்பாடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சிவராமபுரம் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்தும் சிலர் பஸ் நிறுத்தம் அருகே அரைகுறை ஆடையுடன் படுத்து கிடப்பதால் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளதாகவும், மது போதையில் வாகனம் ஓட்டுவதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சிவராமபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார், வருவாய் அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடை அகற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் நேற்று டாஸ்மாக் கடை மூடப்பட்டது.


Next Story