சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x

சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய நாக பூண்டி கிராமத்தில் பிரதான சாலையில் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டது. அப்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இருபுறமும் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்ட பின்பும் இந்த குடிநீர் குழாயிகள் சீரமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் குடிநீர் இல்லாமல் இந்த பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டடோர் சோளிங்கர் - பொன்னை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை குறித்து உரிய துறை அதிகாரியிடம் தெரிவித்து ஆவன செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர்.


Next Story