கரூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம்


கரூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டம்
x

தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

செல்போன் கோபுரம்

கரூர் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 48). இவர் ஊர் ஊராக சென்று முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவா் கடந்த ஏப்ரல் மாதம் வேடசந்தூர் பஸ் நிலையம் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அருகே மீன் விற்றுக்கொண்டிருந்த வியாபாரிக்கும், செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மீன் கடைக்காரரும், மற்றொருவரும் சேர்ந்து செல்வியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செல்வி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

ஆனால் புகார் தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று காலை 10.30 மணியளவில் தாந்தோணிமலை குமரன் சாலையில் உள்ள 200 அடி உயர தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உரிய நடவடிக்கை

தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி செல்வியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவரோ, தன்னை யாராவது காப்பாற்ற முயன்றால் இங்கிருந்து குதித்து விடுவேன் எனவும், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து போலீசார், உறவினர்கள் அனைவரும் ஒலிபெருக்கி மூலம் செல்வியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்த தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாஞ்சலி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கோட்டாட்சியர் ரூபினா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து செல்வியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மதியம் 12.30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, செல்வியின் இடுப்பில் கயிற்றை கட்டி, அவரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் கோபுரம் மீது ஏறி பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story