5 நாட்களாக குளத்துக்குள் சுற்றி வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்


5 நாட்களாக குளத்துக்குள் சுற்றி வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
x

மன்னார்குடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 5 நாட்களாக குளத்துக்குள் சுற்றி வந்தார். அவரை கிராம மக்கள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

திருவாரூர்

வடுவூர்:-

மன்னார்குடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 5 நாட்களாக குளத்துக்குள் சுற்றி வந்தார். அவரை கிராம மக்கள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மஞ்சனவாடி திருராமேஸ்வரம் ஊராட்சிக்கு உட்பட்ட மணக்கரை கிராமம் மெயின்ரோடு பகுதியில் வெட்டுக்குளம் உள்ளது. இந்த குளத்துக்குள் இறங்கிய 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 5 நாட்களாக தண்ணீரில் அங்கும், இங்கும் சுற்றி வந்தார்.

இதைப்பார்த்த கிராம மக்கள் அவரை குளத்தில் இருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் குளத்தைவிட்டு வெளியேற மறுத்துள்ளார்.

காப்பகத்தில் சேர்ப்பு

நேற்று ஊராட்சி செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் அந்த பெண்ணை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கிராம மக்கள் விசாரித்தபோது, அவருக்கு ஊர், பெயர் விவரங்களை கூற தெரியவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் தமிழக அரசின் சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்துக்கு 181 என்ற எண் மூலமாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவரை, திருவாரூர் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை சேர்ந்த களப்பணியாளர்கள், திருவாரூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

இதற்காக பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மைய பொறுப்பாளர் ராஜேஸ்வரி, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோரை ஊராட்சி மன்ற தலைவர் பாமா கண்ணன் மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.


Next Story