பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்

சமம் என்ற நிலையை எட்டும் வரை பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் நீதிபதி ராஜ்மோகன் பேசினார்.
மகளிர் தின விழா
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும்போது, 'எங்கே பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறதோ அந்த இடம் கோவில் போன்றது. பெண்களை மதிக்கும் இடத்தில் தான் கடவுள் இருப்பார். போலீஸ் துறையில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி பேசுவது? அவர்களை எப்படி கையாள்வது? என்பது எல்லாம் பெண்களுக்கு இயற்கையாகவே இருக்கும் குணங்கள். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது, ஆண் குழந்தைகளை வளர்ப்பதிலும் அடங்கி இருக்கிறது' என்றார்.
நீதிபதி பேச்சு
விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட்டு நீதிபதியுமான ராஜ்மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
நீங்கள் (பெண்கள்) கொண்டாடப்பட வேண்டியவர்கள். உங்களை கொண்டாட வேண்டியவர்கள் நாங்கள். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். பெண் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாலோ, வாகனத்தில் முந்திச் சென்றாலோ திமிர் என்கிறார்கள். அதுவோ ஆண் செய்தால் கெத்து என்கிறார்கள். அந்த மனநிலை மாற்றப்பட வேண்டும்.
காலில் விலங்கிட்டால் உடைத்து விடுவீர்கள். அதனால், பெண்களுக்கு காலம் காலமாக மூளையில் விலங்கிடப்பட்டுள்ளது. இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும். இப்படி தான் ஆடை உடுத்த வேண்டும். இந்த ஆடை தான் உடுத்த வேண்டும் என பல ஆயிரம் ஆண்டுகளாக பதிய வைக்கப்பட்டுள்ளது. அந்த விலங்கு உடைக்கப்பட வேண்டும்.
அதிக வாய்ப்புகள்
எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும். சமம் என்ற நிலையை எட்டும் வரை பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். வார்த்தையால் கூட பெண்களை காயப்படுத்தக்கூடாது. பெண்களை எப்படி மதித்து நடக்க வேண்டும் என்று ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசாருக்கு நீதிபதி, போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, போலீஸ் சூப்பிரண்டுவின் நேர்முக உதவியாளர் (கணக்கு) புஷ்ப வேலம்மாள், அலுவலக கண்காணிப்பாளர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் லதா, தட்டச்சர் நிஷா ஆகியோர் மகளிர் தினம் குறித்து பேசினர். பின்னர், கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பார்த்திபன், ஞானரவி, இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், மாயா ராஜலட்சுமி மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.






