பெண்கள் சாதனை படைக்க முன்வர வேண்டும்
பெண்கள் சாதனை படைக்க முன்வர வேண்டும் என்று கோவையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
பெண்கள் சாதனை படைக்க முன்வர வேண்டும் என்று கோவையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
மாணவிகளை சந்தித்தார்
மக்கள் நீதி மய்யம் தலைவர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தார். நேற்று காலை கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கமல்ஹாசன் சென்றார். அவரை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாணவிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசும் போது, நான் படித்த பள்ளியில் அதிக வசதிகள் இருந்தும் என்னால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் நீங்கள் வசதிகள் இல்லாமல் படித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இதையடுத்து அவர், அந்த பள்ளிக்கு காற்று மூலம் குடிநீர் உற்பத்தி செய்யும் எந்திரத்தை வழங்கினார்.
மக்களிடம் மனு பெற்றார்
இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி 88-வது வார்டு கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்ற கமல்ஹாசன், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் அவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
நான் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்பவன் அல்ல. எனக்கும் இந்த பகுதி மக்களுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தொடர்பு இருக்கிறது. இங்கு 800 குடும்பங்கள் உள்ளன.
ஆனால் ஒரே ஒரு கழிவறை மட்டும்தான் இருப்பதாக கூறினார்கள். எனவே நாங்கள் உங்களுக்கு கழிவறை கட்டி கொடுக்கிறோம். இது தேர்தல் வாக்குறுதி இல்லை.
நாங்கள் கட்டிக்கொடுக்கும் இந்த கழிவறையை நீங்கள் உங்கள் கழிப்பறையாக நினைத்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நான் மீண்டும் வந்து அந்த கழிவறையை பார்வையிடுவேன்.
அப்போது அது சுத்தம் இல்லாமல் இருந்தால் துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்வேன். உங்கள் பகுதிக்கு தேவையான குடிநீரை கொண்டுவர நான் பாடுபடுவேன். தற்போது இளைஞர்கள் மத்தியில் போதை கலாசாரம் அதிகரித்து விட்டது.
அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று நினைப்பது இல்லை. எதிர்காலத்தை நினைத்து, இளைஞர்கள் அந்த போதை பழக்கத்தைவிட்டு வெளியே வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விருது வழங்கும் விழா
பின்னர் மாலையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் விருது வழங்கும் விழா கோவை குனியமுத்தூரில் நடந்தது.
இதில் 105 வயதிலும் விவசாயம் செய்து வரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள், இஸ்ரோ விஞ்ஞானி ஸ்ரீமதி ரேஷன் உள்பட 25 பெண்களுக்கு சாதனை விருதை கமல்ஹாசன் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் சாமானியர்கள்தான். மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும். காந்தி, வந்ததும் சுதந்திரம் வாங்கி கொடுக்கவில்லை.
40 ஆண்டுகள் போராட்டத்தின் பின்னர்தான் சுதந்திரம் கிடைத்தது. இந்த அரங்கில் இருக்கும் அனைவரும் மாற்றத்தின் விதைகள். இங்கு விருது பெற்ற பெண்கள் அனைவரும் சாதனையாளர்கள்தான்.
இந்த வயதிலும் அந்த மூதாட்டி விவசாயம் செய்து வருகிறார். எனவே பெண்கள் வீடுகளில் முடங்கி கிடக்காமல் சாதனை படைக்க முன்வர வேண்டும். நமது வீரத்தின் உச்ச கட்டமே அகிம்சைதான்.
பிறப்பு கோளாறுகளை குறிப்பிடுவதை தவிர்த்து சிறப்பு குழந்தைகள் என்று குறிப்பிட வேண்டும்.
அரசு அங்கீகாரம்
தாய்நாடு, தாய் மண் என்று சொல்வதுபோன்று தாய்மார்களுக்கு அரசு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அதை செய்ய வேண்டும் என்று அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். ஓட்டுக்கு காசு வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்து அனைவரும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.