திருவிதாங்கோட்டில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: பெண்கள் கர்ப்ப காலத்தில் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்;அமைச்சர் மனோதங்கராஜ் அறிவுரை
திருவிதாங்கோட்டில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மனோதங்கராஜ், பெண்கள் கர்ப்ப காலத்தில் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
தக்கலை.
திருவிதாங்கோட்டில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மனோதங்கராஜ், பெண்கள் கர்ப்ப காலத்தில் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தக்கலை ஒன்றியம், திருவிதாங்கோட்டில் வைத்து நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் சரோஜினி வரவேற்றார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-
புத்தகங்களை படிக்க வேண்டும்
ஒரு அரசு மக்களின் தேவைகளை அறிந்து செய்தால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நம்முடைய அரசை பொறுத்தமட்டில் மக்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து செய்யும் அரசாக உள்ளது. நாட்டில் எத்தனையோ குடும்பங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடியாமல் உள்ளது. அவர்களுக்காகதான் அரசே இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. பெண்கள் கர்ப்பக்காலத்தில் நல்ல புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு உடல் உழைப்பு மிக முக்கியம். அதுபோல் நல்ல சத்தான உணவு, ஓய்வும் மிக அவசியம். இந்த மூன்றையும் கண்டிப்பாக பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு
தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் பெண்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக வருகிற 6-தேதி குமரி மாவட்டத்தில் பயிற்சி ஆரம்பிக்கப்படுகிறது. முதல்கட்டாக 450 பெண்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். விதவை பெண்களுக்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இவ்வாறு அமைச்சர் மனோதங்கராஜ் பேசினார்.
பரிசுகள்
இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல், பூ, பழங்கள், பலகாரங்கள் அடங்கிய சீதனங்களை வழங்கிய அமைச்சர் ஒரு பெண்ணிற்கு வளையல்களை அணிவித்தார். மேலும், ஆரோக்கியமான குழந்தைகள், சமையல் செய்முறை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 50 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், செயல் அலுவலர் வினிதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனீஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பெமீனா, தி.மு.க.மாவட்ட துணைச்செயலாளர் ராஜ், ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் வீரவர்கீஸ், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரராஜ், ஒன்றிய அவைத்தலைவர் நேசமணி, பேரூர் துணைச்செயலாளர் அலி மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.