மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்


மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
x

மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

தஞ்சாவூர்

பேராவூரணி:

பேராவூரணி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அட்டை பெட்டிகளுக்கு தீவைத்தனர்.

பேச்சுவார்த்தை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு மாந்தோப்பு பகுதியில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த கடையால் பஸ் நிறுத்தத்தில் பெண்கள் காத்திருக்க முடியாத நிலை உள்ளது என கூறி கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சுகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கடந்த 17-ந்தேதி கடை அகற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கடை மூடப்படவில்லை.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கடைமுன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை பட்டுக்கோட்டை - பேராவூரணி சாலையில் கொட்டி தீவைத்து எரித்தனர். மேலும் கடையை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புகளையும் பிரித்து எறிந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சுகுமார், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மதுக்கடை மூடப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story