முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்
திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம் சென்றனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் புதுப்பட்டி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு முதல் ஆடி செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டப்பட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் விரதமிருந்து தினசரி இரவு அம்மனுக்கு கும்மி கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தல், பூத்தட்டு, தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து ஊர்காவலன் கோவில், சீனி விநாயகர், அகத்தீஸ்வரர் கோவில்களுக்கு சென்று அங்கு வழிபாடு நடத்தி விட்டு மீண்டும் முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் தேவகோட்டை கோட்டையம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா கடந்த 17-ந்தேதி தொடங்கி ஆடி செவ்வாய்க்கிழமை அன்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினந்தோறும் காலை, மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது செவ்வாய்க்கிழமையையொட்டி தேவகோட்டை நகர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.