சிவபெருமானுக்கு இனிப்பு அடை படையலிட்டு பெண்கள் வழிபாடு


சிவபெருமானுக்கு இனிப்பு அடை படையலிட்டு பெண்கள் வழிபாடு
x

திருவாதிரை விழாவையொட்டி சிவபெருமானுக்கு இனிப்பு அடை படையலிட்டு கறம்பக்குடி பெண்கள் வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை

ஆருத்ரா தரிசன விழா

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி கறம்பக்குடி, மழையூர், பிலாவிடுதி, வடகாடு, கீரனூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் ஆருத்ரா தரிசன விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

இந்த வழிபாட்டிற்கு ஒவ்வொரு வீடுகளிலும் தனி பூஜை அறைகள் உள்ளன. வசதியற்றவர்கள் துணிகளால் தடுப்புகளை ஏற்படுத்தி அறைபோல் வடிவமைத்து வைத்து உள்ளனர். இந்த அறைகளின் சுவரில் திருவாதிரை வழிபாட்டிற்ெகன தனி கோலம் வரையப்பட்டு இருக்கிறது. இவற்றின் முன்பு இனிப்பு அடையை படையல் செய்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.

வரலாற்று குறிப்பு

திருவாதிரை நாளில் வல்லநாட்டு நகரத்தார் சமூக பெண்கள் செய்யும் இனிப்பு அடை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அடை மற்ற நாட்களில் செய்யப்படுவது இல்லை. இதற்கென தனி வரலாற்று குறிப்பும் உள்ளது. இதுகுறித்து கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த நகரத்தார் சமூக பெண்கள் கூறியதாவது:-

காவிரி பூம்பட்டினத்தில் எங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். அன்னதானம், கோவில் கும்பாபிஷேகம் என சிவதொண்டின் காரணமாக ஏழ்மையில் துன்பப்பட்டார். சிவபெருமான் அவரை சோதிக்க எண்ணி ஒரு திருவாதிரை நாளில் வயோதிக முனிவர் உருவில் செட்டியார் இல்லம் வந்து எனக்கு பசிக்கிறது. உணவளியுங்கள் என்றார்.

பச்சரிசி மாவு, வெல்லம்

செட்டியார் வீட்டில் அரிசியோ, சமையல் பொருட்களோ இல்லை. செட்டியார் மிகவும் வருந்தி வீட்டில் இருந்த சிறிது பச்சரிசி மாவையும், வெல்லத்தையும் கலந்து அடையாக சுட்டு, வீட்டில் வாழை இலையில் சாப்பிட்டு நீண்ட நாட்கள் ஆனதால் அப்பகுதியில் படர்ந்திருந்த சுரை இலையை பறித்து அதில் அடையை வைத்து சிவபெருமானுக்கு பரிமாறினார். முனிவர் உருவில் இருந்த சிவபெருமான் இவரின் பக்தியை மெச்சி சிவபெருமானாக காட்சி கொடுத்தார்.

அதன்பின் செட்டியார் மீண்டும் பெரும் செல்வந்தரானார். செட்டியார் இல்லத்தில் சிவபெருமான் காட்சியளித்ததை போற்றும் வகையில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தன்று வீட்டில் பச்சரிசி மாக்கோலம் இட்டு பச்சரிசி வெல்லம் கலந்த அடை சுட்டு சுரை இலையில் படையல் வழிபாடு நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story