முகூர்த்தகாலுக்கு வளையல், மஞ்சள் கயிறு கட்டி பெண்கள் வழிபாடு


முகூர்த்தகாலுக்கு வளையல், மஞ்சள் கயிறு கட்டி பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

ஆடி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள முகூர்த்தகாலுக்கு வளையல், மஞ்சள் கயிறு கட்டி பெண்கள் வழிபாடு நடத்தினர்.

சேலம்

கோட்டை மாரியம்மன்

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. சேலம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா ஒரு மாதம் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு ஆடித்திருவிழாவையொட்டி கடந்த 5-ந் தேதி முகூர்த்தகால் நடப்பட்டது. வருகிற 25-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஆடித்திருவிழாவை முன்னிட்டும், ஆனி மாத கடைசி வெள்ளியையொட்டி நேற்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் உள்ள முகூர்த்தகாலுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு போன்றவற்றை கட்டி வேண்டுதல் நிறைவேற வழிபாடு நடத்தினர். அதாவது, குழந்தை இல்லாத தம்பதி தங்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும் வேண்டுதல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது.

வர்ணம் பூசும் பணி நிறைவு

இதனிடையே, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணிகள் தொடங்கி நடந்து வந்தது. ஆனால் தற்போது கோபுரம் முழுவதும் வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. மேலும், கோவில் வளாகத்திற்குள் இதர திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஆடித்திருவிழா முடிந்தவுடன் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story