குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம்
நல்லம்பள்ளி:-
பாளையம்புதூர் ஊராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குடிநீர் பிரச்சினை
நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் ஊராட்சி கோம்பைகொட்டாய் கிராமத்தில் சுமார் 40- க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சம்மந்தப்பட்ட கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிக்கு ஆளாயினர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு, பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த சம்மந்தப்பட்ட கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு பாளையம்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு, தர்ணா போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.