மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்


மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்
x

தொரப்பாடி, அரியூர் அரசுப்பள்ளிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர்

மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன்கடை விற்பனையாளர்கள் மூலம் கடந்த கடந்த 20-ந் தேதி முதல் 4 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகளில் 4,53,934 குடும்ப அட்டைகள் உள்ளன. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 2 கட்டங்களாக பதிவு செய்யப்படும் என்றும், முதல்கட்டமாக 397 முகாம்களில் 3,02,955 குடும்ப அட்டைகளின் விண்ணப்பங்களும், 2-ம் கட்டமாக 263 முகாம்களில் 1,50,987 குடும்ப அட்டைகளின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

23,856 விண்ணப்பங்கள் பதிவேற்றம்

அதன்படி நேற்று முன்தினம் 397 முகாம்களில் விண்ணப்பம் பதிவு செய்யும் பணி தொடங்கியது. குடும்ப தலைவிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் முகாமிற்கு சென்று பதிவு செய்தனர். சில இடங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக விண்ணப்பங்களை கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

வேலூர் மாவட்டத்தில் நடந்த 397 முகாம்களில் முதல்நாளில் 23,856 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நடந்தது.

கலெக்டர் ஆய்வு

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, அரியூர் அரசு தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்ற முகாம்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?, செல்போன் செயலியில் விவரங்களை பதிவேற்றுவதில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்று கலெக்டர் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், வழங்கல்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story