மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம் - தஞ்சாவூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
தஞ்சாவூரில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,
திருச்சியில் இன்று வேளாண் சங்கமம் திருவிழா மற்றும் கண்காட்சியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் தஞ்சையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த பணிகளின் திறப்பு விழா மற்றும் பந்தல் சிவா இல்ல திருமண வரவேற்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரில் தஞ்சைக்கு புறப்பட்டார்.
அப்போது அவர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள மனையேறிப்பட்டி கிராமத்தில் திடீரென இறங்கி அங்கு நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது முகாம் எவ்வாறு நடைபெறுகிறது, இன்றைய தினம் எத்தனை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன போன்ற பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தகுதியான பெண்கள் ஒருவரும் விடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் பலர் உடன் இருந்தனர்.