மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம்- டோக்கன் வினியோகம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. இதற்கான பணிகளை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. இதற்கான பணிகளை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆய்வு செய்தார்.
மகளிர் உரிமைத்தொகை
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதில் ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் நேற்று முதல் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டன. அதன்படி திருவெண்காடு பகுதியில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யும் பணியினை மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை பெறுவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை. குடும்ப அட்டை பதிவு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவணங்களை இணைக்க தேவையில்லை
விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்ட குடும்பத்தலைவிகள் அதை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்துடன் எவ்வித ஆவண நகலையும் இணைக்க தேவையில்லை. விண்ணப்ப பதிவு முகாம் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும்.
முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் நடைபெறும் நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடை தகவல் பலகை மூலமாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வில் கூட்டுறவு சார்பதிவாளர் பன்னீர்செல்வம் உடன் இருந்தனர்.