மகளிர் வாழ்வாதார சேவை மையம்
ஆக்கூரில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் லலிதா திறந்து வைத்தார்.
திருக்கடையூர்:
ஆக்கூரில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் லலிதா திறந்து வைத்தார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் 94 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது ஊரக பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகை செய்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேவை மையம் திறப்பு விழா
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் தொழில் மேம்பாட்டினை வலுப்படுத்தவும், தொழில் முனைவோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வணிக மேம்பாட்டு உதவி சேவைகளை வழங்குவதற்காக இத்திட்டத்தின் மூலம் மகளிர் வாழ்வாதார சேவை மையம் (ஓரிட சேவை மையம்) அமைக்கப்படுகிறது. அதன்படி செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் ஊராட்சியில் மகளிர் வாழ்வாதார சேவை மைய திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன் வரவேற்றார்.
தொழில்முனைவோர்
விழாவில் கலெக்டர் லலிதா, மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த மையத்தின் மூலம் மகளிர், இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு தொழில் தொடங்குவதில் ஏற்படும் இடையூறுகளையும், தடைகளையும் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து அந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்களுக்கு தொடக்க நிதி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள், உணவு பாதுகாப்பு சான்றிதழ்கள், பான் அட்டைகள், மின்னணு பணபரிவர்த்தனை அட்டைகள் ஆகியவற்றை கலெக்டர் லலிதா வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிங்காரவேலு மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர்கள், மகளிர் சேவை மையத்தினர் கலந்து கொண்டனர்.