கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடங்களாக மகளிர் போலீஸ் நிலையங்கள் மாறிவிட்டன- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடங்களாக மகளிர் போலீஸ் நிலையங்கள் மாறிவிட்டன- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x

மகளிர் போலீஸ் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடங்களாக மாறி விட்டன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரை


மகளிர் போலீஸ் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடங்களாக மாறி விட்டன என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் மீது அவமதிப்பு வழக்கு

மதுரையைச் சேர்ந்த ஜனார்த்தன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு ஒரு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-

சில வருடங்களுக்கு முன்பு என் மீது என் மனைவி, மதுரை திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்துவதற்காக என்னை போலீசார் அழைத்திருந்தனர். நானும் போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். ஆனால் என்னிடம் முறையான விசாரணையை இன்ஸ்பெக்டர் விமலா நடத்தாமல், என்னை கைது செய்து சிறையில் அடைத்தார். எனவே அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

எந்திரத்தனமாக கைது கூடாது

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தமிழகத்தில் மகளிர் போலீசாரின் பொன்விழா ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முதன்முதலாக மகளிர் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. அந்த போலீஸ் நிலையம் வெற்றிகரமாக செயல்பட்டதால், தமிழகம் முழுவதும் மகளிர் போலீஸ் நிலையங்கள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டன.

தற்போது 222 மகளிர் போலீஸ் நிலையங்களில் 35,359 பெண் போலீசார் பணிபுரிகின்றனர். அங்கு புகார்களின் அடிப்படையில் விசாரிக்கும்போது, அதிகபட்சம் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவாக தண்டனை வழங்கும் குற்றங்களில் எந்திரத்தனமாக கைது செய்யக்கூடாது. இதை பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

சுதந்திரமாக கருத்து

தமிழகத்தில் பெண்களை பாதுகாத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க தண்டனையை பெற்றுத்தரும் அமைப்பாக மகளிர் போலீஸ் நிலையங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவை கட்டப்பஞ்சாயத்து நடக்கும் இடங்களாக மாறிவிட்டன.

தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் பெண்கள், குழந்தைகள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகவும், தைரியமாகவும் தெரிவிக்கும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழக மகளிர் போலீஸ் பிரிவு, பொன்விழாவை சந்திக்கும் இந்த தருணத்தில் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்ஸ்பெக்டருக்கு எச்சரிக்கை

இந்த வழக்கை பொறுத்தவரை, இன்ஸ்பெக்டர் விமலாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பிய உடன், அவர் இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவர் இனிமேல் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story