சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்
சுடுகாட்டில் ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.
சமயபுரம்:
ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாகாளிகுடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் இல்லை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி அமைத்து கொடுக்க வேண்டும், இங்குள்ள கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாக அதிகாரியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அங்கம்மாள் என்பவர் தலைமையில் நேற்று காலை சுடுகாட்டில் உருவ பொம்மையை படுக்க வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த பேரூராட்சி நிர்வாகத்தினர், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கட்சி பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.