மகளிர் உரிமைத்தொகை: உதவி மையங்கள் செயல்பட தொடங்கின
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிய, புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்து மகளிருக்கு ரூ.1,000 உதவித்தொகைக்கான ஆணை மற்றும் அதற்கான பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பித்தவர்களில் 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. எனவே தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
இந்தநிலையில், சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உதவி மையங்கள் செயல்பட தொடங்கின.
◾️ சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
◾️ பிற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
◾️ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, மீண்டும் விண்ணப்பங்கள் பதிவு செய்வது, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு உரிமைத் தொகை வராமல் இருப்பது உட்பட எந்த சந்தேகங்கள் குறைகள் இருந்தாலும் பொதுமக்கள் உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம்.
◾️ நிராகரிப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட பின், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.