மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடக்கம்


மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடக்கம்
x

கரூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது.

கரூர்

விண்ணப்பப் பதிவு முகாம்

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பப் பதிவு முகாமினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட மொச்சக்கொட்டம் பாளையம் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு முகாமில் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில்:-

390 இடங்களில்...

கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 390 இடங்களில் முகாம்கள் மூலமாக பொதுமக்களிடம் விண்ணப்பங்களை நேரில் பெற்று பதிவு செய்யும் முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. மொத்தம் கரூர் மாவட்டத்தில் 583 முகாம்கள் நடைபெறக்கூடிய சூழலில் முதல் கட்டமாக நேற்று முதல் 390 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு முகாமிலும் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான நிழற்கூடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதி ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வினியோகிக்கும் பணி ஏற்கனவே கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 90 சதவீதம் விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.

10 நாட்கள்

இந்த முகாம்களில் வரக்கூடிய ஒவ்வொரு பெண்களுடைய விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் அதனை சரிபார்க்கிறார்கள். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுகின்ற தன்னார்வலர் பயோ மெட்ரிக் முறையில் அந்த விண்ணப்ப படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமமும் இன்றி அவர்களை காத்திருக்க செய்யாமல் மிக விரைவாக அந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெறும்.

சரிபார்ப்பு பணிகள்

இந்த விண்ணப்பங்களை பெற்று கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பின்னர் கணினி மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்யும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். இந்த விண்ணப்பம் பெற்றவுடனே ஒவ்வொருவருக்கும் ஒரு குறுந்தகவல் வரும். அந்த குறுந்தகவல் வந்த பின்னர் கூறிய காலத்தில் அவர்கள் தகுதி வாய்ந்தவர்களா, இல்லையா என்ற அடிப்படையில் அவர்களுக்கான செய்தி வெளியிடப்படும்.

இந்த முகாம் விண்ணப்ப பதிகளை பெறக்கூடிய முகாம். இதில் விண்ணப்பங்கள் எழுத, படிக்க தெரியாதவர்களுக்காகவே தனியாக தன்னார்வலர்களை நியமித்து உள்ளோம். குறித்த தேதியில் ஒதுக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய விண்ணப்பங்களை கடைசி 2 நாட்களில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, துணை பதிவாளர் கரூர் சரகம் அபிராமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story