மகளிர் உரிமைத்திட்ட முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்


மகளிர் உரிமைத்திட்ட முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்ட முதற்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் நாளை தொடங்குகிறது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்ட முதற்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் நாளை தொடங்குகிறது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்ப பதிவு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சமூகநலம், மகளிர் உரிமைத்துறை ஆணையருமான அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பேசியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் 4.8.23 வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட முகாம் 5.8.23 முதல் 16.8.23 வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமானது காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறவுள்ளது.

413 முகாம்கள்

இந்த விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க 27 கண்காணிப்பு அலுவலர்களும், 83 மண்டல அலுவலர்களும், துணை கலெக்டர் நிலையில் 4 மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று வட்ட அளவிலான பணிக்குழுவும் அமைக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 211 முகாம்களும், இரண்டாம் கட்டமாக 202 முகாம்களும் என மொத்தம் 413 முகாம்கள் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய குடும்ப தலைவிகள் அனைவருக்கும் இத்திட்டம் சென்றடையும் வகையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொது) அம்பிகாபதி, மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story