சித்திரை வீதிகளில் கழிப்பறைகளை சீரமைக்கும் பணி


சித்திரை வீதிகளில் கழிப்பறைகளை சீரமைக்கும் பணி
x

சித்திரை வீதிகளில் கழிப்பறைகளை சீரமைக்கும் பணி பற்றி மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை


காரைக்குடியை சேர்ந்த வக்கீல் மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றது. மேலும் 64 திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலமாகவும் உள்ளது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வயதான பக்தர்கள் இயற்கை உபாதையை கழிக்க மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் தேவையான அடிப்படை வசதியுடன் கூடிய கழிப்பறை இல்லை. இதனால் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளிலும், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் அசுத்தம் செய்து வருகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் செல்லும் பொதுமக்களும், வெளிநாட்டினரும் முகம் சுளித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். சித்திரை வீதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வராமல் இருக்கும் கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் உரிய பதில் அளிக்கும்படி அதிகாரிகளுக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை மாநாகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி சித்திரை வீதிகளில் கழிப்பறைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 2 மாதத்தில் முடிந்து விடும். அதன்பின் அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story