அரைகுறையாக விடப்பட்ட பணிகள் முடிவது எப்போது?


அரைகுறையாக விடப்பட்ட பணிகள் முடிவது எப்போது?
x

ராமநாதபுரத்தில் ரூ.30 கோடியில் நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி வழக்குகள் வாபஸ் பெற்ற நிலையிலும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் ரூ.30 கோடியில் நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி வழக்குகள் வாபஸ் பெற்ற நிலையிலும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

போக்குவரத்து நெருக்கடி

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே கேட் அமைந்து உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் வரும் சமயங்களில் கேட் மூடப்படுவதால் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் மக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனை போக்கும் வகையில் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தினை போக்கிடும் விதமாக மேற்கண்ட ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜிதத்திற்கு ரூ.5.14 கோடி மதிப்பிலும், கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25.60 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.30.74 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

ஆமை வேகம்

இந்த மேம்பாலமானது, மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது. அதேபோல, பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்பட உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பால பணிகள் 2 ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வந்த நிலையில் ரெயில்வே கேட்டின் இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளது. ரெயில்வே நிலையத்திற்கு முன்னதாக சாலையில் பணி தொடர்ந்து நடைபெறாமல் நின்று விட்டது. இதேபோல சேதுநகர் பகுதியிலும் பாதியிலேயே பணிகள் முடிவடையாமல் நின்றுவிட்டது. இதுதவிர, ரெயில்வே தண்டவாள பகுதியில் மேம்பால பணி ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பாலம் அமைப்பதற்காக சரக்கு ரெயில்களில் ராட்சத இரும்பு கர்டர்கள் வந்து இறங்கி பல மாதங்களாகியும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. மேம்பால பணிகளில் 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பழைய பஸ்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தனியார் கட்டிடங்களின் முன்பகுதியை அப்புறப்படுத்தினால் தான் பாலம் பணி நடைபெற முடியும் என்ற நிலை எழுந்தது. கையகப்படுத்தும் நிலத்திற்கு பணம் குறைவாக தருவதாக கூறி சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சமரசம்

அரசின் உத்தரவினை தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தடைகோரி வழக்கு தொடர்ந்தவர்களை வருவாய் கோட்டாட்சியர் மூலம் பேசி சமரசம் செய்தார். இதன் அடிப்படையில் மக்கள் நலன்கருதி வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கை திரும்பப் பெற சம்மதித்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்குகளை காரணம்காட்டி பணிகளை மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் அந்த தடையும் நீங்கி உள்ள போதிலும் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.

மீண்டும் பணி

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி தலைவர் ஆர்.கே.கார்மேகம் கூறியதாவது:- ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தினால் தாமதமாகி வந்தது. ஆனால், தற்போது அந்த தடைகளை எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆகியோரின் முயற்சியால் நீக்கப்பட்டு மீண்டும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ரெயில்வே தடம் மின்பாதையாக மாற்றப்பட்டு விட்டது. அதற்காக அமைக்கப்பட்ட உயர் அழுத்த மின்பாதை பாலத்தின் உயரத்தை விட கூடுதலாக உள்ளது.

எனவே ஏற்கனவே திட்டமிடப்பட்ட பாலத்தின் வடிவமைப்பு தற்போது மாற்றப்பட்டு உயர் அழுத்த மின்பாதையை விட உயரமாக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பாலத்தின் நடுப்பகுதியை ரெயில்வே துறையினர்தான் அமைப்பார்கள். மாநில அரசின் சார்பில் நடைபெற வேண்டிய பணிகள் விரைவாக நடைபெறுகிறது. பாலம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும். இவ்வாறு கூறினார்.

எதிர்பார்ப்பு

வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:-

2018-ல் பணிகள் தொடங்கப்பட்ட இந்த ரெயில்வே மேம்பால பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. ஆனால், அதற்கு பின்பு பாம்பன் கடலில் ரெயில்வே பாலம் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. கால தாமதத்தை தவிர்த்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெருக்கடி, பெட்ரோல், டீசல் செலவு குறையும்.

உதுமான்:- ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டினால் போக்குவரத்து நெருக்கடி குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் பணிகள் தாமதமாகி வருவதால் பாலம் கட்டும் பணி பாதியில் நிற்பதால் அந்த பகுதியை கடந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாகி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறோம். மேலும் கீழக்கரை செல்ல பட்டிணம்காத்தன், அம்மன்கோவில் ஆகிய ஊர்களை சுற்றி செல்வதால் பெட்ரோல், டீசல் செலவு, தூரம், நேரம் அதிகமாகி வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகத்தினர் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story