மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர் சரிபார்க்கும் பணி-கலெக்டர் ஆய்வு


மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர் சரிபார்க்கும் பணி-கலெக்டர் ஆய்வு
x

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் வீடு, வீடாக சென்று அலுவலர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் வீடு, வீடாக சென்று அலுவலர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1½ கோடிக்கு மேல் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு செல்போன் வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 89 ஆயிரத்து ரேஷன் அடைதாரர்களில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 462 ரேஷன் அட்டைதாரர்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சரிபார்த்து வருகின்றனர்.

விண்ணப்பதாரர் வசிக்கும் வீடு சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்றும், என்ன வேலை பார்க்கிறார்கள், என்ன வாகனம் வைத்திருக்கிறார்கள் மற்றும் வருமானம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்து சரிபார்க்கப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரிப்பார்க்கும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,627 நியாய விலைக்கடைகள் உள்ளன. இதில் 7 லட்சத்து 89 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 81.5 சதவீதம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் 1 லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்களில் அவர்கள் குறிப்பிட்டு உள்ள விவரங்களில் சில சந்தேகங்கள் எழுந்து உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற பதிவு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றது. தற்போதைய விவரங்கள் சாிபார்க்கும் பணிகள் 45 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் 7 அல்லது 8-ந் தேதிக்குள் இந்த பணி நிறைவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தாசில்தார் சரளா மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story