ஊர்க்காவல் படையில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


ஊர்க்காவல் படையில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
x

நாமக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு நாமக்கல் பிரிவுக்கு ஆண்கள் 11 பேர், பெண்கள் 4 பேர் என 15 பேரும், திருச்செங்கோடு பிரிவுக்கு ஆண்கள் 4 பேர், பெண்கள் ஒருவர் என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் பணிபுரிய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்றப்பின்னணியும், எந்த அமைப்பிலோ, அரசியல் கட்சி சார்ந்தவராகவோ இருக்கக்கூடாது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வருகிற 30-ந் தேதி வரை நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஊர்க்காவல்படை அலுவலகத்தில், வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். ஆட்கள் தேர்வு நடக்கும் நாள், பின்னர் தெரிவிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையான அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் (இருப்பின்) ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பி இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story