ரூ.15 கோடியில் குடகனாறு அணை ஷட்டர்கள் சீரமைக்கும் பணி; விரைவில் தொடங்க அதிகாரிகள் ஆலோசனை


ரூ.15 கோடியில் குடகனாறு அணை ஷட்டர்கள் சீரமைக்கும் பணி; விரைவில் தொடங்க அதிகாரிகள் ஆலோசனை
x

வேடசந்தூர் அருகே ரூ.15 கோடியில் குடகனாறு அணை ஷட்டர்கள் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே ரூ.15 கோடியில் குடகனாறு அணை ஷட்டர்கள் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

ரூ.15 கோடி ஒதுக்கீடு

வேடசந்தூர் அருகே அழகாபுரியில், 27 அடி உயரம் கொண்ட குடகனாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்மட்டம் தற்போது 19 அடியாக உள்ளது.

இதற்கிடையே அணையின் பழைய 5 ஷட்டர்களில் பழுது ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. இதையடுத்து ஷட்டர்களை பழுது பார்த்து அணையில் முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை கருத்தில் கொண்டு ஷட்டர்களை சீரமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் திண்டுக்கல்லில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் குடகனாறு அணையின் ஷட்டர்களை சீரமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு செயற்பொறியாளர் கோபி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் நீதிபதி, உதவி பொறியாளர்கள் முருகன், தமிழ்செல்வன், குடகனாறு பாதுகாப்பு சங்கத்தலைவர் ராமசாமி, செயலாளர் பொம்முசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புச்சாமி, சுப்பிரமணி மற்றும் திண்டுக்கல், கரூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அணையில் தற்போது 19 அடி வரையில் தண்ணீர் உள்ளது. இதனால் அணையில் இருந்து 9 அடி தண்ணீர் விவசாய பாசனத்திற்காக முதலில் வெளியேற்றப்படும். அப்போது அணையின் நீர்மட்டம் 10 அடியாக இருக்கும். இதையடுத்து அணையின் உட்பகுதியில் மண் கரை அமைத்து பழைய 5 ஷட்டர்களை சீரமைக்கும் பணிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story