மாமனாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது
மாமனாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே வீட்டில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் மாமனாரை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மது குடித்ததை தட்டிக்கேட்டார்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள திருநெல்லிக்காவல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கிட்டு(வயது 70). விவசாயி. இவர் தனது மகள் செல்வியை திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம் சித்தாநல்லூரை சேர்ந்த முருகையன்(54) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தார்.
திருமணத்திற்கு பின்னர் மாமனார் வீட்டிலேயே முருகையன் தங்கி இருந்து கூலி வேலை செய்து கொண்டு மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். நேற்று முருகையன் தனது மாமனார் வீட்டில் மது குடித்துக்கொண்டு இருந்தார். இதனை மாமனார் கிட்டு தட்டி கேட்டார்.
மாமனாரை வெட்டிக்கொன்றார்
இதனால் ஆத்திரம் அடைந்த முருகையன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மாமனாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த கிட்டுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
கைது
இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமனாரை வெட்டிக்கொன்று விட்டு தலைமறைவாக இருந்த முருகையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.