நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழிலாளி கைது


நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழிலாளி கைது

கோயம்புத்தூர்

பேரூர்

பேரூர் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கட்டுமான தொழிலாளி

கோவையை அடுத்த ராம செட்டிபாளையம் அருகே விசாகா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 45).கட்டுமான தொழிலாளி. இவருக்கு திருமணமாகி புஷ்பலதா என்ற மனைவியும், சிவஸ்ரீ என்ற மகளும், தீபக்குமார் என்ற மகனும் உள்ளனர்.

வடிவேல் தனது வீட்டில் 30 கோழிகள் மற்றும் 6 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். மேலும், ஆடுகளை அந்த பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

ஆடுகளை துரத்திய நாய்

இவர் கடந்த 5-ந் தேதி, தனது வீட்டை ஒட்டி இருந்த மேய்ச்சல் நிலத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்று ஆடுகளை துரத்தியது. இதனால், ஆடுகள் அங்கும், இங்கும் ஓட்டம் பிடித்தன. ஆடுகளை நாய் துரத்துவதை வடிவேலு பார்த்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை (ஏர்கன்) எடுத்து நாயை நோக்கி சுட்டார். இதில், நாயின் உடலில் குண்டு பாய்ந்து, அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தது.

கைது

இதில், வடிவேலு நாயை சுடுவதை அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்த்து விட்டார். இதுதொடர்பாக, அந்த பெண் பேரூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்,நாயை வடிவேலு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது உறுதியானது.

இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர். மேலும் அவர் நாயை சுட பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story