தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி கைது
கொரடாச்சேரி அருகே குடும்ப தகராறில் மனைவிக்கு ஆதரவாக பேசிய தம்பியை கத்தியால் குத்திக்ெகான்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே குடும்ப தகராறில் மனைவிக்கு ஆதரவாக பேசிய தம்பியை கத்தியால் குத்திக்ெகான்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மாமியார்-மருமகள் இடையே தகராறு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி லலிதா(வயது 60). இவர்களுடைய மகன்கள் சக்திவேல்(35), விவசாய கூலி ெதாழிலாளி. கார்த்தி(28). கட்டிட தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.
கார்த்தி மனைவி புனிதா(24). இவர்களுக்கு காவியா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கார்த்தியின் மனைவி புனிதாவுக்கும், மாமியார் லலிதாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
கத்தியால் குத்திக்கொலை
அப்போது அங்கு வந்த சக்திவேல் தனது தாயிடம் தகராறு செய்த புனிதாவை தட்டி கேட்டுள்ளார். அதைப்பார்த்த கார்த்தி தனது மனைவி புனிதாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட மோதல் அண்ணன், தம்பிக்கு இடையே மோதலாக மாறியது. இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தம்பி என்றும் பாராமல் கையில் வைத்திருந்த கத்தியால் கார்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கார்த்தியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அத்திக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கைது
இதுகுறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவிக்கு ஆதரவாக பேசிய தம்பியை கத்தியால் அண்ணன் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.