கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவியை கம்பியால் அடித்துக் கொன்ற தொழிலாளி
கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுவிட்டு, கிராம நிர்வாக அலுவலரிடம் தொழிலாளி சரண் அடைந்தார்.
பேரையூர்,
கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுவிட்டு, கிராம நிர்வாக அலுவலரிடம் தொழிலாளி சரண் அடைந்தார்.
கம்பியால் அடித்து கொலை
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 44). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முருகாம்பாள் (40). நூற்புமில்லில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளான்.
இந்த நிலையில் மனைவி முருகாம்பாளை கொன்றுவிட்டதாக கூறி டி.கல்லுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் கிருஷ்ணன் நேற்று காலையில் சரண் அடைந்தார். இதுபற்றி டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று முருகாம்பாள் உடலை மீட்டனர். அப்போது, இரும்பு கம்பியால் தலையில் அடித்தும், முகத்தில் குத்தி சிதைத்தும் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுெதாடர்பாக கிருஷ்ணனை கைது செய்து, சம்பவத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
சாமியாராக நினைத்தேன்
என்னுடைய மனைவிக்கும், டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துராமன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதுபற்றி எனக்கு தெரியவந்ததும், முருகாம்பாளை கண்டித்தேன். அதற்கு அவள், உனக்குத்தான் உண்மை தெரிந்துவிட்டதே, விருப்பம் இருந்தால் என்னுடன் இரு. இல்லை என்றால் நீ வீட்டை விட்டு வெளியே போய்விடு என்று கூறினார். அதன்பின்னும் முருகாம்பாளிடம் தொடர்ந்து முத்துராமன் பேசி வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று மனைவியிடம் கூறினேன்.
அவள் கள்ளக்காதலை கைவிடாததால், வீட்டை விட்டு வெளியேறி சாமியாராக போய்விடலாம் என நினைத்து ஒரு கோவிலுக்கு சென்று தலையில் மொட்டை போட்டுக்்கொண்டேன். அதன்பின் நான், சாமியாராக போனாலும் ஊருக்குள் கிருஷ்ணனின் மனைவிதானே என்று அசிங்கமாக பேசுவார்கள், என நினைத்து, முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து மனைவிக்கு அறிவுரை கூறினேன். அப்போதும் அவள் கேட்கவில்லை.
நேற்று அதிகாலையில் மனைவி முருகாம்பாள், மகன் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுவிட்டு, கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.