தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
செங்கம் அருகே தொழிலாளியை சரமாரியாக தாக்கியதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம்
செங்கம் அருகே உள்ள தொழிலாளியை சரமாரியாக தாக்கியதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரமாரியாக தாக்கினர்
செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 38), கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (35), அவருடைய மனைவி சந்தியா (25) ஆகியோருக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதனைத்தொடர்ந்து பிரதாப் அவருடைய நண்பர்கள் பழனி, பரத், பாலாஜி, ஏழுமலை உள்ளிட்டோருடன் சென்று ரஜினியை அவரது வீட்டின் அருகே சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த ரஜினி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், ரஜினியின் உடலை மீட்க சம்பவ இடத்திற்கு சென்றனர்.
ஆனால் ரஜினியை சரமாரியாக தாக்கியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ரஜினியின் உறவினர்கள் அவரது உடலை சென்னசமுத்திரம்- செங்கம் சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரதாப், சந்தியா, பழனி ஏழுமலை உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர்.
பரத் மற்றும் பாலாஜி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.