தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் சலவன்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34), தொழிலாளி. இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தேவியுடன் (34) திருமணமானது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரகாஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும், அதனால் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கணவரின் செயலால் வேதனை அடைந்த தேவி 2 குழந்தைகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரகாஷ் சில நாட்களுக்கு பின்னர் மனைவி, குழந்தைகளை அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சென்றதாகவும், ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த பிரகாஷ் கடந்த 3-ந்தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.