தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்ப்யூட்டர் சர்வீஸ் தொழிலாளி
ஓட்டப்பிடாரம் அருகே பாறைகுட்டம் நடுதெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் தீத்துமாலை (வயது 40). இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக தீத்துமாலை மனைவி, குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குடும்ப பிரச்சினை
குடும்ப பிரச்சினையால் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தல்குடியில் இருந்து பாறைக்குட்டம் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வந்துள்ளார். பாறைக்குட்டத்திலுள்ள தனது தாய் நாகஜோதியின் வீட்டில் அவர் இருந்துள்ளார் அப்போது நாகஜோதிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தூக்கு போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட தீத்துமாலை நேற்று காலையில் பாறைகுட்டம் கிராமத்தில் உள்ள அவருடைய புஞ்சை நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மணியாச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீத்துமாலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மணியாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.