தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர் அருகே மகளை கல்லூரி சேர்க்க முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகளின் கல்லூரி கட்டணம்
வேலூரை அடுத்த பெருமுகை புத்தர் தெருவை சேர்ந்தவர் அன்பு ஜீவநேசன் (வயது 54). இவருடைய மனைவி ஸ்டெல்லாதேவி. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்தனர். கடந்தாண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மகள் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். அதற்காக அன்பு ஜீவநேசன் சில என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு சென்று கல்வி கட்டணம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்துள்ளார். அந்த கல்லூரிகளில் குறைந்த கல்வி கட்டணம் கூறிய கல்லூரியில் மகளை சேர்க்க முடிவு செய்துள்ளார்.
அதையடுத்து அவர் அதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் பணத்தை ஏற்பாடு செய்து கல்லூரியில் மகளை சேர்க்க முடியவில்லை என்றும், அதனால் அன்புஜீவநேசன் ஒரே மகளை கல்லூரியில் சேர்க்க முடியவில்லையே என்று மனைவியிடம் கூறி கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அன்புஜீவநேசன் மனைவி ஸ்டெல்லா தேவியை ஷூ கம்பெனியில் வேலைக்கு விட்டு விட்டு வீடு திரும்பினார். மகள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மாலையில் வேலை முடிந்து ஸ்டெல்லா தேவி வீடு திரும்பினார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தார். அங்கு அன்புஜீவநேசன் தூக்கில் தொங்கியதை கண்டு அவர் கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளின் கல்வி கட்டணத்தை ஏற்பாடு செய்து கல்லூரியில் சேர்க்க முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.