கபிலர்மலை அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
பரமத்திவேலூர்:
கபிலர்மலை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
கூலித்தொழிலாளி
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் தீபன் சக்ரவர்த்தி என்ற நந்தகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு 1½ வயதில் இளமதி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சங்கீதா கடந்த 15-ந் தேதி பெருமாபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். நந்தகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் நந்தகுமார் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து சுவிட்சை போட்டார்.
விசாரணை
அப்போது மின்கசிவால் ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு நந்தகுமார் உயிருக்கு போராடினார். அவருடைய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.