அதியமான்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
நல்லம்பள்ளி
அதியமான்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
அதியமான்கோட்டை அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). தச்சு தொழிலாளியான இவர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த முருகன் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது ஜாகிரி பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவருடைய விவசாய கிணற்றில் அவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்து முருகனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
விசாரணை
பின்னர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முருகன் கிணறு அருகே நடந்து சென்றபோது தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.