காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு


தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரில் காட்டு யானை தாக்கி தொழிலாளி இறந்தார். யானை தாக்கியதில் கோவிலுக்கு சென்ற விவசாயி படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரில் காட்டு யானை தாக்கி தொழிலாளி இறந்தார். யானை தாக்கியதில் கோவிலுக்கு சென்ற விவசாயி படுகாயம் அடைந்தார்.

காட்டு யானைகள் நடமாட்டம்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது அங்குள்ள பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.

மேலும் சில நேரங்களில் வனவிலங்கு -மனித மோதல் நடை பெற்று வருகிறது. எனவே காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்கு கள் ஊருக்குள் புகுவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயி படுகாயம்

இந்த நிலையில் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் திருமாலூ ரை சேர்ந்த விவசாயி சவுந்தர்ராஜன் (வயது58) நேற்று காலை 7 மணியளவில் மொபட்டில் சங்கிரி கருப்பட்டராயன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காட்டு யானை ஒன்று குட்டியுடன் குறுக்கே வந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், காட்டு யானைகளிடம் இருந்து தப்பிக்க மொபட்டை திருப்பி தப்பி செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் அந்த காட்டு யானை தனது துதிக்கையால் சவுந்தர்ராஜை தாக்கியது. இதில் அவருக்கு வலது கை முறிந்து படுகாயம் அடைந்தார்.

ஆனாலும் அவர் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து கூச்சலிட்ட படி தப்பி ஓடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளி சாவு

இதையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான மயில்சாமி (வயது65) என்பவர் ஆட்டுக்கு இலை, தழைகளை பறிக்க கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் சென்றார். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி செல்ல முயன்றார்.

ஆனால் அந்த காட்டு யானை அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கியது. மேலும் காட்டு யானை மிதித்ததில் மயில்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத் துறையின ருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் அச்சம்

காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார். அவரை தாக்கிய யானை தான் தொழிலாளி மயில்சாமியையும் தாக்கி கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 2 பேரை காட்டு யானை தாக்கியதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள னர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story