தொழிலாளி பஸ் சக்கரத்தில் சிக்கி சாவு


தொழிலாளி பஸ் சக்கரத்தில் சிக்கி சாவு
x

குழித்துறையில் சாலையோரம் ஏற்பட்ட தகராறில் மதுபோதை ஆசாமி பிடித்து தள்ளியதில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை,

குழித்துறையில் சாலையோரம் ஏற்பட்ட தகராறில் மதுபோதை ஆசாமி பிடித்து தள்ளியதில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

குழித்துறை அருகே உள்ள மடிச்சல் ஈத்தவிளையை சேர்ந்தவர் முத்தையன் (வயது 63), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

முத்தையன் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக குழித்துறைக்கு வந்தார். அங்கு பொருட்கள் வாங்கிய பிறகு மீண்டும் வீடு நோக்கி சாலையோரமாக நடந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் மருதங்கோடு கோணம் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (27) என்பவர் மதுபோதையில் அவரை வழிமறித்தார். அப்போது மது குடிக்க ஸ்ரீஜித் பணம் கேட்டுள்ளார். ஆனால் முத்தையன் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி வீட்டுக்கு செல்ல முற்பட்டார்.

பஸ் சக்கரத்தில் சிக்கி சாவு

அந்த சமயத்தில் ஸ்ரீஜித் அவரை பிடித்து அங்கிருந்து செல்ல விடாமல் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஸ்ரீஜித் திடீரென முத்தையனை பிடித்து சாலையில் தள்ளியதாக கூறப்படுகிறது.

இதில் நிலைகுலைந்த முத்தையன் சாலையில் விழுந்த போது அந்த வழியாக அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சின் பின் சக்கரத்தில் முத்தையன் சிக்கியதால் உடல் நசுங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் முத்தையன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அருகில் நின்றவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முத்தையன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வாலிபர் கைது

இதற்கிைடயே ஸ்ரீஜித் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அவரை பொதுமக்கள் பிடித்து தாக்கியதாக ெதரிகிறது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து ஸ்ரீஜித்தை மீட்டனர். மேலும் அவர் மீது அஜாக்கிரதையாக தள்ளி விட்டதில் தொழிலாளி இறந்ததாக 304(2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதற்கிடையே ஸ்ரீஜித் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபோதை ஆசாமி சாலையில் தள்ளி விட்டதில் தொழிலாளி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story