பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி அணையில் மூழ்கி தொழிலாளி பலி


பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி அணையில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 Jun 2023 2:30 AM IST (Updated: 19 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி அணையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி அணையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

கூலித்தொழிலாளி

தாண்டிக்குடி அருகே உள்ள மங்களம்கொம்பு எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கோபி (வயது 32). கூலித்தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த வினித், ஆனந்த், தினேஷ் உள்பட 7 வாலிபர்களும் நேற்று பட்டிவீரன்பட்டி அருகே உள்ள மருதாநதி அணைக்கு குளிக்க சென்றனர். 74 அடி உயர மருதாநதி அணையில் தற்போது 54 அடி வரை தண்ணீர் உள்ளது.

இந்தநிலையில் அணையில் கோபி மற்றும் அவரது நண்பர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது கோபி மட்டும் அணையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில், எதிர்பாராதவிதமாக அவர் அணை நீரில் மூழ்கினார்.

இதற்கிடையே தங்களுடன் குளித்த கோபியை காணாததை கண்டு அவரது நண்பர்கள் அணையில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த நண்பர்கள் உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அணையில் மூழ்கி பலி

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் அணையில் பாதுகாப்பு உபகரணங்களுடன் இறங்கி கோபியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கோபி பிணமாக மீட்கப்பட்டார்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த பட்டிவீரன்பட்டி போலீசார், அணையில் மூழ்கி பலியான கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு வசதி

மருதாநதி அணையில் குளிப்பதற்காக தினமும் ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் அணை பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. இதனால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. மேலும் மதுபிரியர்கள், மது குடித்துவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே வீசி உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனை தடுக்கவும், அணையில் பாதுகாப்பு வசதிகளை செய்யும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story