பூச்சிமருந்து தெளித்தபோது மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
ிருமருகல் அருகே வயலில் டிரோன் மூலம் பூச்சிமருந்து தெளித்தபோது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
திட்டச்சேரி:
புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு தென்னங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ராமகிருஷ்ணன் (வயது 35) கூலித்தொழிலாளி. தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சூசைநாதன் மகன் சுந்தர்(32). நண்பர்களான இவர்கள் சம்பவத்தன்று திருமருகல் அருகே புத்தகரத்தில் உள்ள ஒருவருக்கு சொந்தமான வயலில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்துள்ளனர். அப்போது திடீரென ராமகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏனங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.