மேம்பால சிமெண்டு பூச்சு விழுந்து தொழிலாளி பலி: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


மேம்பால சிமெண்டு பூச்சு விழுந்து தொழிலாளி பலி: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் பலியான தொழிலாளியின் உடலை வாங்க உறவினர்கள் நேற்று 2-வது நாளாக மறுத்து விட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் பலியான தொழிலாளியின் உடலை வாங்க உறவினர்கள் நேற்று 2-வது நாளாக மறுத்து விட்டனர்.

தொழிலாளி பலி

நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 56). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரிசி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 3-ந்தேதி நெல்லை சந்திப்பு பகுதிக்கு பால் வாங்குவதற்காக வேல்முருகன் மொபட்டில் வந்தார். அங்குள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரடுக்கு மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக பக்கவாட்டு காங்கிரீட் தடுப்பு தூணில் பூசப்பட்டிருந்த சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. அது கீழே சென்று கொண்டிருந்த வேல்முருகன் தலையில் விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் காலை வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

மறியலுக்கு முயற்சி

இதுகுறித்து தகவல் அறிந்த சந்திப்பு போலீசார், வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதை அறிந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பாலம் புதுப்பிக்கும் பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும் வேல்முருகன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதவிர நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலுக்கு முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

2-வது நாளாக போராட்டம்

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வேல்முருகன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். உரிய இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே உடலை வாங்குவதாக கூறினார்கள்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாலம் புதுப்பிக்கும் ஒப்பந்த நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.


Next Story