தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
குழித்துறை பாலத்தில் தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
களியக்காவிளை,
குழித்துறை பாலத்தில் தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நண்பர்கள்
மார்த்தாண்டத்தை அடுத்த ஆயிரம்தெங்கு பகுதியைச் சேர்ந்தவர் வினுகுமார் (வயது36) தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35) என்பவரும் நண்பர்கள். ராஜேசின் தாயார் களியக்காவிளையை அடுத்த ஒற்றாமரம் பகுதியில் சாலையோர டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று வினுகுமாரும், ராஜேசும் ஒற்றாமரம் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றுவிட்டு மார்த்தாண்டம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். குழித்துறை ஆற்றுப்பாலம் தொடங்கும் பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
பரிதாப சாவு
அவர்களில் வினுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வினுகுமாரின் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த வினுகுமாருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உண்டு. படுகாயம் அடைந்த ராஜேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.