50 அடி ஆழ கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி


50 அடி ஆழ கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
x

அன்னவாசல் அருகே 50 அடி ஆழ கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை

கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது

இலுப்பூர் அருகே உள்ள பாப்பன்குடியை சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் சரவணன் (வயது 35), டிராக்டர் டிரைவர். இதேபோல் கீழக்குறிச்சி மலம்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் அழகர்சாமி (40), தொழிலாளி. இவர்கள் 2 பேரும் கம்பக்கப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியில் கல் உடைக்கும் பணிக்காக சென்றுள்ளனர். இந்தநிலையில் பணிகள் முடிந்து சரவணன், அழகர்சாமி ஆகியோர் கம்பரசர் டிராக்டரை குவாரியிலிருந்து ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுள்ள கல்குவாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

தொழிலாளி பலி

இதில் அழகர்சாமி மற்றும் சரவணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அழகர்சாமி பரிதாபமாக இறந்தார். சரவணனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அழகர்சாமியின் மனைவி தவமணி (35) அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story