மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x

வாணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை



வாணாபுரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள இளையாங்கன்னி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெபஸ்டின் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குழந்தைமேரி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஜெபஸ்டின் இளையாங்கன்னி அருகே தொண்டாமனூர் பகுதியில் உள்ள ராமசாமி என்பவரின் நிலத்தில் கரும்பு வெட்டுவதற்காக சென்றார்.

அங்கு கரும்பு வெட்டும் போது அறுந்து கிடந்த மின்கம்பி ஜெபஸ்டின் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சௌந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சம்பவ இடத்திற்கு மின்துறை அதிகாரிகள் வர வேண்டும் என்று ஜெபஸ்டினின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

சாலை மறியல்

காலை 9 மணிக்கு சம்பவம் நடந்த நிலையில் மின்துறை அதிகாரிகள் பகல் 12 மணிவரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த ஜெபஸ்டினின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியலை கைவிடவில்லை. இதனையடுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா, வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் அங்கு வந்து ஜெபஸ்டின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



ஆனால் தொடர்ந்து சமாதானம் ஆகாத உறவினர்கள் பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்தின் முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஜெபஸ்டினின் உடல் பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story